அரசின் யோசனைக்கு மகிந்த ராஜபக்ச போர்க்கொடி!

Report Print Murali Murali in அரசியல்

தேசிய அரசு என்ற போர்வையில் அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே அரசின் நோக்கமாக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று கண்டி தலதாமாளிகைக்கு பயணம் மேற்கொண்டு, அல்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன்பின்னர், இவ்விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,

“அரசியலமைப்பினை காப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என மார்த்தட்டி, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்தவர்கள், இப்பொழுது அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க பாடுபடுகின்றனர்.

அவ்வாறு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து 113 உறுப்பினர்களின் ஆதரவினைத் திரட்டவே முயற்சிக்கின்றனர். இதுவொரு கேலிக்கூத்தாகும்.” என்றார்.

எவ்வாறாயினும், 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமது எதிர்ப்பினை மகிந்த அணி உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அரசொன்றை அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவரான சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, நாடாளுமன்ற செயலாளரிடம் நேற்று கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.