மஹிந்த ராஜபக்சவின் திட்டத்தை பின்பற்றும் மங்கள

Report Print Ajith Ajith in அரசியல்

ஊடகவியலாளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் மஹிந்த ராஜபக்சவின் திட்டத்தை தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் பின்பற்றுவதாக குறறம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணிணி, கார் என்று பல்வேறு இலஞ்ச திட்டங்களை முன்வைத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மங்கள சமரவீர, ஊடகவியலாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 மில்லியன் ரூபாவை என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா என்ற திட்டத்தின் கீழ் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் ஊடகங்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடு என்று ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் 30 மாகாண ஊடகவியலாளர்கள் உட்பட்ட, 136 பிரதான ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டன.

இதில் 11 பேர் அப்போதைய ஊடக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலயின் கண்டி தொகுதியை சேர்ந்தவர்கள்.

இதனை தவிர, மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 547 ஊடகவியலாளர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்யவென 12 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் வட்டியில்லா கடன்களையும் வழங்கியது.

இதற்கான வட்டியை இலங்கையின் வரி செலுத்துனரே செலுத்தியதாக ஆங்கில ஊடகம் கூறுகிறது.