இனிவரும் நாட்களில் அம்பலத்துக்கு வரும்! ஜனாதிபதி வேட்பாளர் இவரே?

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சரும், ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து தீர்க்கமானமுடிவெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் எனது அமெரிக்கக் குடியுரிமை நீக்கப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட நான் தயாராகிவிட்டேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வினவியபோதே பஸில் ராஜபக்ச மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எல்லோருக்கும் பதவி ஆசை வந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது அம்பலத்துக்கு வரும். இந்நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் வராமல் தீர்மானம் எடுப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் அறிவிப்பு வரவில்லை. அதற்கிடையில் அரச தரப்புக்குள்ளும் எதிர்த்தரப்புக்குள்ளும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தி மக்கள் மனதை வென்றவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.

குறித்த வேட்பாளர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவார் அல்லது அந்தக் கட்சியின் அனுமதியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.