பிரித்தானியர் ஆட்சியில் இருந்ததைவிட இன்று மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுளோம்! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததை விடமோசமான அடக்குமுறைகளுக்கும், உரிமை மறுப்புகளுக்கும் நாம் உள்ளாக்கப்பட்டோம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் இதன் போது பேசிய அவர்,

“பிரித்தானியர் ஆட்சிகாலத்திற்கு முன்பிருந்தே தனித்தனி இராச்சியங்களாக மொழி, கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பேணிவந்த இனக்குழுமங்களை பிரித்தானியர் தமது காலனியாதிக்கத்தின் போது நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்து தனிஒரு நிர்வாக அலகாக உருவாக்கியமை ஆசியாமற்றும் ஆபிரிக்காவின் பலநாடுகளிலும் அடக்கு முறைகளுக்கு வழிவகுத்து உள்நாட்டு யுத்தங்களை ஏற்படுத்தியது.

காலனியாதிக்கத்தின் கீழ் அடக்குமுறைகளுக்கும் வளசுரண்டல்களுக்கும் மத்தியில் வாழ்ந்த இந்த இனங்கள் பிரித்தானியர்கள் வெளியேறிய போது தமக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனார்கள்.

எமதுகதையும் அதுதான். 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததை விடமோசமான அடக்குமுறைகளுக்கும், உரிமைமறுப்புகளுக்கும் நாம் உள்ளாக்கப்பட்டோம்.

அதனால்தான் இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான எமது எதிர்ப்பைக் காட்டும்பொருட்டு சுதந்திர தினத்தை கரிநாளாகக் கருதி எமது தமிழ் மக்கள் அகிம்ஸை முறையில் போராட்டங்களை இன்று நடத்தி வருகின்றார்கள்.

சுதந்திரதினம் சுதந்திரம் பெற்ற மக்களாலேயே கொண்டாடப்படலாம். அடக்குமுறைகள் மத்தியில் வாழும் எம்மால் சுதந்திரம் கொண்டாடப்படுவது அழுத்தத்தின் பேரால் நடைபெறுவதா கஅமையும்.

எம்மிடையே பத்து வருடங்களின் பின்னரும் பெருவாரியாக குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் பலவந்தத்தாலேயே நடைபெறுவதாக அமையும். இனியும் எமது மக்கள் தமக்கு நீதிகிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாத ஒருகட்டம் தற்பொழுது உருவாகியுள்ளது.

பிரித்தானியர்களின் காலனியாதிக்க செயற்பாடுகளினால் இவ்வாறு பாதிக்கப்பட்ட பல்வேறு இனக்குழுமங்களும் தமது சுதந்திரதினத்தை இவ்வாறு 'கரிநாளாக' பிரகடனப்படுத்தி இன்றும் போராட்டம் நடத்துவதை நாம் உலகில் பல இடங்களில் காண்கின்றோம்.

இது எம்மால் மட்டும் நடத்தப்படும் போராட்டம் அன்று. அடக்குமுறைகள், மக்கள் உரிமைகளை வழங்குவதில் அசமந்தப்போக்கு, ஆக்கிரமிப்பு போன்றவை எங்கெங்கு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

எமக்கெதிரான இந்த அடக்குமுறை எதற்காக என்று வரலாற்று ரீதியாகப் பார்க்கின்றபோது, இலங்கையின் இறுதி இராச்சியமாக இருந்த கண்டி இராச்சியம் கி.பி 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை தென்னிந்திய நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டுவந்தது.

கண்டி இராச்சியத்தின் அரசுடமையைத்தம் வசம் வைத்திருக்கும் இராஜதந்திர நோக்குடன் நாயக்கர்கள் பலர் பௌத்தர்களாக மதம் மாறினர்.

பிரித்தானியர் இலங்கையை விட்டுவெளியேறிய பின்னர் மகாவம்ச கோட்பாடுகளுக்கு அமைய அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தநாயக்க வழித்தோன்றல்களான பல ஜனாதிபதிகளும் சிங்களத் தலைவர்களும் பதவி ஆசைக்காக இனவழிபாகுபாட்டில் இறங்கினர்.

இது சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிவினையை ஏற்படுத்தியது. இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி வகுத்தது. தொடர்ச்சியாக எமது மக்களுக்கு எதிராக இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எமது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. எம்மை நாமே ஆளும் அதிகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

பறித்தவற்றில் அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் என்றுபேரம் பேசுகின்றார்கள் அரசாங்கத்தினர். அரசாங்கத்தைக் கோபப்படுத்தாதீர் என்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மெத்தப்படித்த நபர்கள்.

இன்றைய எமது இந்த நிலைமையினைச் சரியாகப்புரிந்து கொண்டு காணாமல் போன மக்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 71வது இந்த சுதந்திரதினத்தை கரிநாளாகக்கருதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நடவடிக்கை எம்மை நெகிழவைக்கும் நடவடிக்கை. எம்மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் நடவடிக்கை. புத்துணர்வைத் தரும் போராட்டம்.

நம்பிக்கையை அளிக்கும் போராட்டம் என்று கூறினால் மிகையாகாது. இதுகாறும் இருந்ததமிழ்த் தலைமைகள் போல் அல்லாது எமதுமக்கள் விழித்தெழுந்துள்ளார்கள் என்று தெரியவருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவிலும் இன்று சுதந்திரதினத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்றைய இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் அங்கு நடைபெறும் போராட்டத்தில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை.

அதேவேளை, தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவிப்பதற்காக கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாகப் பற்றுறுதியுடன் நடத்திவரும் போராட்டம் வியக்கத்தக்கது. அவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். நான் அந்தமக்களுடன் தொடர்பில் இருந்துவருகின்றேன்.

நேற்றையதினம் கூட அவர்களுள் முக்கியமான ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார். இன்னும் சிலநாட்களில் நான் அங்குசென்று அவர்களைச் சந்திக்க இருக்கின்றேன்.

மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் காலாவதி ஆகின்றது. இந்த 34/1 தீர்மானத்தில் 2015ஆம் ஆண்டு இலங்கைதொடர்பில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை நிறைவேற்றும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது.

மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகும் போது இலங்கைவிடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றது. நீதிக்கான எமது போராட்டத்தில் இந்தத் தீர்மானம் முக்கியமானது.

இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ள நிலையில் அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இந்த விடயத்தை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் காலம் வந்திருக்கின்றது.

சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் தகுதி வந்த சர்வதேசநீதிமன்ற பொறிமுறை ஒன்றினூடாக நீதிமற்றும் பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழர் தரப்பு ஐ.நா பொதுச்சபையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

ஐ.நா பொதுச்சபையின் 60/147 தீர்மானத்தின்படி சர்வதேச நாடுகளுக்கு இருக்கின்ற கடப்பாட்டுக்கு அமைவாகவும் ஐ.நா சாசனத்தின் 7வது அத்தியாயத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் கீழும் செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை கூட்டாக சமர்ப்பிப்பது பொருத்தமானது.

இதுதொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். இது தொடர்பில் தம்பிமார் கஜேந்திரகுமார், சுரேஷ் பிறேமச்சந்திரன், ஐங்கரநேசன் ஆகியோர் மற்றும் தங்கையார் அனந்தி சசிதரன் ஆகிய பலரின் கட்சிகளுடன் தொடர்புகொள்ள இருக்கின்றேன்.

எமது போராட்டங்கள் எமது மக்களுக்கு விடிவு காலத்தைத் தந்து, ஒற்றுமையைத் தந்து, உரிய நிவாரணங்களையும் பெற்றுத்தர வேண்டியே இன்று நாம் இணைந்துள்ளோம் என்று” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers