ஐக்கிய தேசியக் கட்சி அன்று இந்த விடயத்தை கூறவில்லை

Report Print Sujitha Sri in அரசியல்

தேசிய அரசாங்கம் அமைக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அன்று கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த போது, தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் தனி அரசாங்கமே அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

இன்று தனி அரசாங்கமே அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்க போவதாக அன்று கூறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தம்முடன் உள்ளனர் என்றுதான் அன்று கதைத்தனர்.

இந்த நிலையில் இன்று தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்த காரணத்தின் அடிப்படையில் முயற்சிக்கின்றனர்? சரியாக இன்னும் 8 மாதங்களில் அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடையவுள்ளது.

ஏனெனில் நடைபெறவுள்ள தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி அணிகளுடன் ஏனைய அணிகளையும் இணைத்து கொண்டு திறமையான ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் நிறுத்தும் போது, இந்த அரசாங்கம் தோல்வியடைவது உறுதி என கூறியுள்ளார்.