சுங்க திணைக்கள பணிப்பாளர் நியமனத்தில் அரசியல் தலையீடுகளா?

Report Print Murali Murali in அரசியல்

சுங்கத்திணைக்களத்திற்கான புதிய பணிப்பாளர் நியமனம், அமைச்சரவையின் தீர்மானமாகும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நியமனத்தில் எந்தவித அரசியல் தலையீடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டிருந்த அவர் இதனை கூறியுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த திடீர் இடமாற்றம் குறித்து தென்னிலங்கையில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நிலையியல் கட்டளையின் கீழ் சுங்க திணைக்களத்துக்கான புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல,

“சுங்கத் திணைக்களத்துக்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதென்பது அமைச்சரவைத் தீர்மானம்.

அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் தான்தோன்றித்தனமான நடவடிக்கை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.