கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களையும் பாதுகாக்குமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.
அமைச்சர் சாகல ரத்னாயக்கவுக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்குமிடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையிலுள்ள பிரதி அமைச்சர் அலுவலக பிரதானியின் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
துறைமுக பாதுகாப்பு பலப்படுத்தும் பொருட்டு இலங்கை சுங்க திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தற்சமயம் நாட்டிற்கு உகந்த முறையில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய பாதுகாப்பு திட்டத்தை தீட்டுமாறும், அதனை நடைமுறைப்படுத்தும் செயன்முறை தொடர்பில் தன்னை அறிவுறுத்துமாறும் துறைமுக அதிகார சபையின் உயர் முகாமைத்துவத்திடம் அறிவித்துள்ளார்.
துறைமுக அதிகார சபையின் அனைத்து கேள்வி மனுக்கள் மற்றும் வழங்குதல் செயற்பாடுகள் உரிய சட்டதிட்டங்களிற்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறியதுடன், அவை வெளிப்படை தன்மையுடையவனவாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய வியாபாரங்கள், திருட்டுத்தனமான பரிமாறல்கள், இரகசிய கலந்துரையாடல்கள் மூலமாக துறைமுகத்தினுள் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்க இயலாதெனவும், வெளிப்படை தன்மையை காப்பதே அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய பிரதான கடமையெனவும் தெரிவித்துள்ளார்.