ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்களம்

Report Print Steephen Steephen in அரசியல்

தன்னை கொலை செய்யும் சதித்திட்டம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது தெரிவித்த விடயம் தொடர்பில் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்ச மற்றும் தன்னை கொலை செய்ய திட்டமிட்டமை தொடர்பான விசாரணையில் தன்னிடம் வாக்குமூலம் பெறுவது மட்டுமே இறுதியாக செய்ய வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸ் திணைக்களத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மிகவும் திறமையாக சிறந்த முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டு மக்கள் இதனை அறிந்துக்கொள்ள முடியும். குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிக்க உள்ளது. இதன் பின்னர் சட்டமா அதிபர், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.