ஜனாதிபதி சட்டத்தரணி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து சிவசக்தி ஆனந்தன் அறிக்கை!

Report Print Thileepan Thileepan in அரசியல்
209Shares

தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்கி ஒட்டுமொத்தமாக எம் மீது அடிமைசாசனத்தினை எழுதுவதற்குத் தயாராகும் பெரும்பான்மையின நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்திற்காக நாடாளுமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த காலத்தில் அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது பத்தாண்டுகளாகின்ற போதும் சத்தமின்றி யுத்தமொன்றை மேற்கொள்வதற்கான பயங்கரவாத தடைச்சட்டம் வலிந்து அமுலாக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அந்தச் சட்டத்தினை மாற்றி சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

அத்துடன் சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தலைதூக்கி வருவதால் அத்தகைய சட்டமொன்று அவசியம் என்றும் காரணம் கற்பித்தது.

இத்தகைய பின்னணியில், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி மேற்படி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதன் பாரதூரத் தன்மையை அறிந்திருந்த எம்மினத்தினைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் அமைதியாகவே இருந்துள்ளனர்.

ஜனநாயகத்திற்காக குரல்கொடுக்கின்றோம் செயற்படுகின்றோம் என்று மக்கள் முன்னிலையில் வார்த்தை ஜாலம் செய்பவர்கள் ஜனநாயகத்தினை முற்றாக நசுக்கும் இத்தகைய சட்டம் தொடர்பில் தற்போது வரையில் மௌனம் காப்பது பாரிய ஐயத்தினை ஏற்படுத்துகின்றது.

இது இவ்வாறிருக்கையில், மேற்படி சட்டம் உயர்நீதிமன்தின் வியாக்கியானத்திற்கு பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விரைந்து அமுலாக்குவதற்கு திரைமறைவில் அமைதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த சட்டம் அமுலாகிய பின்னர் ஜனநாயக போராட்டங்களை செய்பவர்கள், ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் உட்பட சாதாரண மனிதர்களாலேயே குரலை உயர்த்தி பேசக்கூட முடியாத சூழல் தான் ஏற்படப்போகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி, கே.வி.தவராஜாவின் கருத்துப்படி, எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும எந்தவொரு பிரஜையையும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதி என்று கருதமுடிவதோடு பிடியாணையின்றி எவரையும் கைது செய்வதற்கும்.

வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள் 'பயங்கரவாத' செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது.

அதுமட்டுமன்றி, இந்தப் புதிய சட்டத்தில் ஒருவரை தடுத்து வைத்தல் ஆணையைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் காணப்படாததோடு பிரதி பொலிஸ் மா அதிபருக்கும், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கும் அதிகாரங்கள் அதிகமாக வழங்கப்படுவதோடு பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களும் குறைக்கப்படுகின்றன.

இதனால் அதிகார வர்க்கங்கள் அதிகாரத்துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை வலுப்பதற்கே வழி சமைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் இருக்கும் போது சித்திரவதையை அனுபவித்தால் மீண்டும் விசாரணையாளர்களிடத்திலேயே முறையிட வேண்டிய நிலைமைகள் இருப்பதானது திருடன் கையில் சாவியைக் கையளித்தைப்போன்று தான் உள்ளது. ஆகவே சாட்சிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது.

இதனை விடவும், மரணதண்டனை, குற்ற ஒப்புதல் வாக்குமூலம், தடுத்து வைத்து விசாரணை செய்தல் ஆகியனவும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளது.

மிக முக்கியமாக ஒரு பெண்ணை ஆண் பொலிஸ் அல்லது பாதுகாப்பு படை வீரர் கைது செய்வதற்கு கூட இச்சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகவும் மோசமானது என்பதை சர்வதேச வல்லுனர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது சர்வதேச தரத்திற்கு உட்பட்டதல்ல என்றும் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைவிடவும் ஆபத்தானது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனை எமது மக்கள் பிரதிநிதிகளாகவும் சட்டத்தரணிகளாகவும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்காமல் இருப்பதும் எமது மக்களிடமும் இந்நாட்டு மக்களிடமும் இதன் ஆபத்துக்களை எடுத்துச் சொல்லாமல் இருப்பதும் எமக்கு பாரிய சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த நாட்டில் உரிமைக்கான போராட்த்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை அமுலாக்கி தற்போதுவரையில் தமிழர்கள் மீது அச்சட்டத்தினை பாய்ச்சுவதற்கு இடமளித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், எதிர்காலத்தில் அச்சட்டத்தினையும் விட வலிமையான சட்டமொன்றை புதிய பெயரில் அமுலாக்கி ஒட்டுமொத்த இனத்தின் மீதும் அடிமைச்சாசனம் எழுதுவதற்கே முயற்சி செய்கின்றது.

ஆகவே இத்தகைய பாரிய பின்விளைவுகளைக் கொண்ட சட்டத்தினை அமுலாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நாசுக்கான நடவடிக்கைகளை உடன் தடுத்து நிறுவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் பால் செயற்படும் அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுகின்றேன்.

மேலும், இதுதொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து எமது கட்சி துறைசார் வல்லுநர்களுடன் ஆராய்ந்து விரைந்து அறிவிக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது! ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா