இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்! மைத்திரி அதிரடி அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

சிறந்த நல்லொழுக்கம் கொண்ட நாடொன்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளின் போது, அதனை தடுக்கும் வகையில் மனித உரிமை செயற்பாட்டளார்கள் முன்வர வேண்டாம் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த மரண தண்டனையை அமுல்படுத்த போவதான ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தன்னால் கையளிக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் குறித்து, ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை என நீதி அமைச்சர் நேற்ற நாடாளுமன்றில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றில் இன்று இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹனாமாஹேவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மாற்று வழியினை தேடவேண்டும் என அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் மரண தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

நீதிமன்றங்களினால் குற்றம் இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும், அதனை நிறைவேற்றும் ஆவணங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதிக்கு பின்னர் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.