மன்னாரில் வைத்து வாக்குறுதி வழங்கிய இராஜாங்க அமைச்சர்!

Report Print Mubarak in அரசியல்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கும் மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சுகாதார இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அதன்படி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 5 கோடி ரூபா பெறுமதியான ct scanner இயந்திரம், தேவையான கருவிகள் மற்றும் ct scanner க்கான ஒரு கோடி செலவிலான கட்டடம் ஆகியவற்றை வழங்குவதற்கு பைசல் காசிம் உறுதியளித்தார்.

மேலும், வைத்தியசாலையில் வைத்திய ஆலோசகர்களின் எண்ணிக்கையை 23 இல் இருந்து 34 ஆக அதிகரிப்பதற்கும் மகப்பேற்று வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு வைத்தியர், தாதியர் மற்றும் வைத்திய ஆலோசகர் விடுதியை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.என் ஹில்ரோய் பீரிஸ்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஒஸ்மன் டேனி, வட மாகாண சுகாதார பிரதி பணிப்பாளர் டாக்டர் தெழிலன், உயிரியல் வைத்திய பொறியியலாளர் நிரோஷினி மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான எம்.எம்.தமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.