தேசிய அரசு அமைக்கும் தீர்மானம்: விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்

Report Print Rakesh in அரசியல்

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றால் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என்று தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவில்லை.

தேசிய அரசு அமைக்கும் தீர்மானம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று காலையே முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது எனவும், தீர்மானம் மீது வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டால் அதன்போது கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.