பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்: ப.சத்தியலிங்கம்

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரதமர், துறைசார்ந்த அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வழங்குவது தொடர்பில் 4/4/2018 நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு நேற்று மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை வழங்கும் போது ஏற்கனவே கடந்த 40 வருடங்களாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற 35 வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று கடந்த வருடம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு முரணாக, அமைக்கப்பட்டுள்ள கடைகளை வழங்குவது தொடர்பில் கடந்த வாரம் திறந்த கேள்வி கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் என்னை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 35 உரிமையாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகுதியாகவுள்ள கடைகளை திறந்த கேள்வியில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சருக்கு பிரதமரால் பணிப்புரை வழங்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.