ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி தந்தையை இழந்த மாணவர்களுக்கு

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பதற்காக மாகாணசபை ஒதுக்கீடு செய்யும் பணத்தை தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் இன்றையதினம் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

உடனடியாக குறித்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலையை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜீவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வந்தன.

அத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் இவ்வாறு சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கி கணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும்.

அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடைமுறைபடுத்தவுள்ளார்.

Latest Offers