கொக்கிளாய் பகுதியில் மாற்று வழிப்பாதை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Report Print Yathu in அரசியல்

முல்லைத்தீவு - கொக்கிளாய் ,புல்மோட்டை வீதியின் கொக்கிளாய் களப்புக்கான பாலம் மற்றும் அதற்கான மாற்று வழிப்பாதை என்பவற்றை அமைப்பதற்காக அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்குப் பகுதிக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் புல்மோட்டை, கொக்கிளாய் வீதியின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், கொக்கிளாய் களப்புக்கான பாலம் அமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன் இதற்கான பாலத்தை அமைக்குமாறும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

முல்லைத்தீவு - கொக்கிளாய் ,புல்மோட்டை வீதியில் கொக்கிளாய் களப்பு ஊடான கொக்கிளாய் பாலம் மற்றும் அதன் பிரவேச வீதியை நிர்மாணித்தல் ( நிகழ்ச்சி நிரலில் 25 ஆவது விடயம்)

கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்திற்கிடையில் கரையோரத்தில் தரையுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக முல்லைத்தீவு கொக்கிளாய், புல்மோட்டை வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாய் களப்பு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலத்தின் மூலம் முல்லைத்தீவு மற்றும் புல்மோட்டைக்கிடையில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக செக் குடியரசின் வங்கியிடமும், உள்ளூர் வர்த்தக வங்கியிடமும் நிதி வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கமைவாக வங்கியுடன் கடன் இணக்கப்பாட்டு பேச்சு வார்த்தையை நடத்துவதற்கான நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.