அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் அமைச்சரவையின் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசை வழங்க அந்தகட்சியின் தலைவர்கள் கனவு கண்டு வருகின்றனர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் யோசனையை நிறைவேற்றினாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நான் நினைவில்லை.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட உள்ளது.

எனினும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் மட்டுமே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 43(1) பந்தியில் அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அரசியலமைப்புச் சட்டத்தின் 46(1) பந்தியில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் அதிகபட்சமாக 30 அமைச்சர்களை மாத்திரமே நியமிக்க முடியும். தேவையானால், அதனையும் 25 ஆக குறைக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் யோசனையை நிறைவேற்றினாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்குமாறு எவரும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி விரும்பினால் மட்டுமே அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கலாம்.

நாடாளுமன்றத்தின் யோசனைக்கு அமைய அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு உயர் நீதிமன்றமும் ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியாது.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கு எதிராக சென்று அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் நினைப்பார்களாயின் அது பகல் கனவு என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்பவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.