வெளிநாட்டு பால்மாவில் கலப்படமா? அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் உத்தரவு

Report Print Nivetha in அரசியல்

மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பால்மா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நுகர்வோர் அதிகார சபையை கோரியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கலப்படம் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கபெறவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் பணிப்புரைக்கமைய இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.