பலரின் முகத்திரையை கிழிக்க தயாராகும் மைத்திரி! சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

Report Print Murali Murali in அரசியல்

போதைப்பொருள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு வெகுவாக குறைந்திருந்தது.

எனினும், அண்மையில் துபாயில் பாதாள உலக குழுவினர் கூண்டோடு கைது செய்யப்பட்டமை மற்றும் தொடர்ச்சியாக போதைப்பொருள் மீட்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஜனாதிபதியின் செல்வாக்கு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய புலனாய்வுச் சேவை விசேட அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் உத்வேகம் அடைந்துள்ள ஜனாதிபதி போதைப்பொருள் விடயத்தில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய புள்ளிகளை அம்பலப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன் காரணமாக கொழும்பு அரசியல் களம் மீடும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்தும் ஜனாதிபதி காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.