விடுதலைப் புலிகள் குறித்து அன்று பேசியது இதுதான்! விஜயகலா மகேஸ்வரன்

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

யுத்தத்திற்கு முன்னரான கால பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலமையை மாற்றியமைக்க எமது அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன.

அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டது. மற்றும் வன்முறை கலாச்சாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன.

இந்நிலையில், வன்முறை சம்பவங்களையும், போதை பொருள் பாவனையையும் கட்டுப்படுத்த பொலிஸார் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனினும், பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. கடந்த ஆண்டில் ஆறு வயது பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

அராலி பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் இவ்வாறாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து காணப்பட்டன.

இவ்வாறான சம்பவங்களால் பெண் என்ற ரீதியில் மன நிம்மதி இழந்தேன். குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளை வேண்டினேன்.

விடுதலைப்புலிகள் இவ்வறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி இருந்தார்கள். அது பற்றியே அன்றைய தினம் எனது உரையில் குறிப்பிட்டேன். அந்த உரை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுத போராட்டம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்றோ, தனி நாடு அமைய வேண்டும் எனவோ, புலிகளை ஆதரித்து பேச வேண்டுமோ என்ற எந்த உள்நோக்கமும் எனக்கிருக்கவில்லை.

சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை, சமாதானம் மலர வேண்டும் என விரும்புபவர். அதற்காகவே செயல்படுபவர் நான் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.