அரசியல் நலன் சார்ந்து செயற்பட்டு வரும் கரைச்சி பிரதேச சபை

Report Print Suman Suman in அரசியல்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை தொடர்ச்சியாக சுற்று நிரூபங்களுக்கு மாறாகவும், சட்டத்திட்டங்களுக்கு புறம்பாகவும், விதிமுறைகளையும் மீறியும் அரசியல் நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் குரல் கொடுத்து வருகின்ற போதும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனை கரைச்சி பிரதேச சபையின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையானது கிளிநொச்சி தமிழரசு கட்சியின் கிளை அலுவலகம் போன்று செயற்படுகிறது. எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் கருத்துச் சுந்திரமோ, அல்லது அவர்களின் கோரிக்கைகள், வேண்டுகோள்கள் எவையும் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை, அறிக்கைகளில் கூட இடம்பெறுவது கிடையாது.

இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதும் எந்தப் பயனும் ஏற்படவில்லை, முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக சபையில் கருத்து தெரிவித்து வருகின்ற போதும் அதனை சபையின் அறிக்கைகளில் இடம்பெறாது நீக்கி வருகின்றனர்.

இதன்மூலம் அங்கு முறைகேடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான சூழலை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம எழுச்சித் திட்டம்(கம்பரலிய) மூலம் கரைச்சி பிரதேச சபையின் கீழ் வருகின்ற பல அபிவிருத்தி திட்டங்களை மாவட்டச் செயலகம் வழங்கியிருந்தது. முக்கியமாக இதில் வீதி அபிவிருத்தி அடங்குகிறது. இதனை தொழிநுட்ப மேற்பார்வை செய்கின்ற பொறுப்பு சபையினுடையது.

ஆனால், இங்கு இத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகளுக்கான மதிப்பீட்டின் போது திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட வீதி ஒன்றாகவும் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதி வேறொன்றாகவும் காணப்படுகிறது.

அத்தோடு மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள், தர நிர்ணயங்களில் அபிவிருத்திகள் இடம்பெறவில்லை, உதாரணமாக திட்ட மதிப்பீட்டின் படி ஏழு தொண் றோலர் போட வேண்டிய இடத்தில் ஆறு தொண் றோலர் பயன்படுத்தப்படுகிறது.

இதனை மேற்பார்வை செய்ய வேண்டிய பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு மக்கள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அத்தோடு புதிதாக அமைக்கப்பட்டு முடிவுறுத்தப்படாதுள்ள கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பலர் அடாத்தாக கடைகளை அமைத்துள்ளனர். இவர்கள் யாரெனின் ஏற்கனவே டிப்போக் காணியில் இலவசமாக வியாபார நிலையங்களுக்கான காணிகள் வழங்க்கப்பட்டு அவற்றை பல இலட்சங்களுக்கு விற்பனை செய்து விட்டு தற்போது புதிய பேருந்து நிலையத்தில் வியாபார நிலையத்தை அமைத்துள்ளார்கள்.

அவர்களுக்கு மின்சாரமும் பிரதேச சபையின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மிக் முக்கியமானது அவ்வாறு கடை அமைத்துள்ளவர்கள் தமிழரசு கட்சியின் வட்டாரக் கிளைகளில் பதவிகளில் உள்ளவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே சபையின் எவ்வித அனுமதியோ, ஒப்புதலோ இன்றி ஏ9 பிரதான வீதியில் கரபோக்கு சந்திக்கருகில் தவிசாளரினால் அவரது கட்சி செயற்பாட்டாளர்களுக்கு வியாபார நிலையங்கள் வழங்கப்பட்டு அவர்கள் நிரந்தரமாக வியாபார நிலையத்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல இடங்களில் இடம்பெற்று வருகிறது. சபையில் எதிர்தரப்பு உறுப்பினர்கள் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டுகின்ற போதும் தவிசாளர் அதனை கருத்தில் எடுக்காது தன்னிச்சையாக, கட்சி நலன் சார்ந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

மேலும், ஒப்பந்தகாரர்களை தெரிவு செய்தல் ஒப்பந்தங்கள் வழங்குவது, உள்ளி்ட்ட தீர்மானங்களை மேற்கொள்வது என அனைத்து விடயங்களையும் தவிசாளர் தன்னிச்சையாக மேற்கொண்டு வருகின்றார் எனவே தான் நாம் இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தீர்மானித்து ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்கின்றோம்.

எதிர்தரப்பு உறுப்பினர்களின் கருத்துச் சுந்திரத்தை மறுத்து முறைகேடுகளை மேற்கொள்கின்ற சபையானது மக்களின் குரல்களுக்காவது மதிப்பளித்து நியாயமாகவும் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும் நடக்க வேண்டும் என்பதே. இது தொடர்பில் சபைக்குள் குரல் கொடுத்து அதனால் பயன் ஏற்படாத போது தற்போது ஊடக சந்திப்பின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.