ஜனாதிபதியின் உரைக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

Report Print Ajith Ajith in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை தாழ்த்தி பார்க்கும் வகையில் நீதியற்ற முறையில் அமைந்திருந்தது என்று ஆணைக்குழுவின் தவிசாளர் தீபிகா உடுகம அண்மையில் தெரிவித்துள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, கேள்வி எழுப்பியமையை ஜனாதிபதி தமது உரையின் போது கண்டித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சுயாதீனமான ஆணைக்குழு, என்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட ஒருவரின் ஜனநாயக, சிவில் உரிமைகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவாதத்தை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர் சிறைக்கைதிகளின் நலன்களை கண்காணிப்பது ஆணைக்குழுவின் பணிகளில் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இலக்கம் 21 என்ற சட்டத்தின் படி சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை கண்காணிக்கவும், பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டோரின் அடிப்படை தேவைகளை கவனிப்பதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடமையாகும் என்றும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.