நாடாளுமன்றத்தில் நடந்த மோதல்: 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதலான சம்பவத்துடன் தொடர்புடைய 7 நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்புரிமை குழு தீர்மானித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருக்கும் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாது எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை சம்பந்தமாக நாடாளுமன்ற சிறப்புரிமை குழு தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 14, 15, 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த மோதலான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதிப் சபாநாயகர் தலைமையில் நியமித்த சிறப்புரிமை குழு கடந்த 22 ஆம் திகதி அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்தது.

அந்த அறிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜே.வி.பியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கினாலும் 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என பல தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று கூடிய சிறப்புரிமை குழு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோருக்கு எதிராக பொலிஸாரின் கடமைக்கு தடையேற்படுத்தியமை, அவர்களை தாக்கியமை, நாற்காலியால் தாக்கிய காயம் ஏற்படுத்தியமை மற்றும் சபையில் மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ச ராமநாயக்க, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோருக்கு எதிராக கத்தியை கொண்டு வந்தது அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது.

இவர்களை தவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு எதிராக பொது சொத்தான சபாநாயகரின் மேசையில் இருந்த ஒலிவாங்கியை சேதப்படுத்திய மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட உள்ளது.

ஏனைய 52 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட மாட்டாது எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமை குழு கூடி தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.