ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சியின் எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்ச பீதி காரணமாக ராஜபக்சவினரை அடக்குவதற்காக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த திருத்தச் சட்டமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு திருப்பி தாக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் எப்படியாவது ஒரு முடிச்சை போட்டு, அமைச்சரவையை அதிகரித்து, வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள எந்த தரப்பையாவது தன்னுடன் இணைந்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.

தற்போது அமைச்சராக பதவி வகிக்கும் அலிசாஹிர் மௌலானாவை இணைந்து இந்த முடிச்சை போட முயற்சித்து வருகிறது.

அலிசாஹிர் மௌலான அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே அரசாங்கத்துடன் உள்ளது. இதனால், புதிதாக தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை கொண்டு வரும் தேவையில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல், இந்த அரசாங்கத்தினால், அமைச்சரவையின் எண்ணிக்கையை 30க்கும் அதிகரிக்க முடியாது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் அதிகரிக்கவில்லை என்றால், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

நாட்டை நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்க அரச தலைவருக்கு நிறைவேற்று அதிகாரம் அவசியம். நாட்டின் பொருளாதார பிரச்சினை தற்போது போதைப் பொருள் பிரச்சினையாக மாறியுள்ளது.

தனித்து தீர்மானங்களை எடுத்து நாடாளுமன்றத்தில் கூட்டாக பணியாற்றும் அதிகாரம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன எதிர்த்தால் தீர்மானங்களை எடுக்க முடியாது.

இதனால், எவரையாவது பிடித்து தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ள போவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து எடுக்கும் தீர்மானம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதே எமது கேள்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers