கிழக்கு மாகாண ஆளுநர் செய்துள்ள காரியம்!

Report Print Murali Murali in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையினை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியை, ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சமூக சேவைகள் அமைச்சுக்களின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டு தோறும் 20 மில்லியன் ரூபாய் நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த நிதியில் இருந்து 15 மில்லியன் ரூபாவினை ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாண பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரை கற்கின்ற, தந்தையரை இழந்த மாணவர்களுக்கு, மாதம்தோறும் 500 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வரையறைக்குள் 2500 மாணவர்கள் இருப்பார்கள் எனவும், அவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு இந்த தொகையினை வழங்க முடியும் எனவும் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறியுள்ளார்.

எவ்வாயினும், உத்தேசித்துள்ள மாணவர்களின் தொகையிலும் அதிகமான மாணவர்கள் இருப்பார்களாயின், திறைசேரியுடன் பேசி, மேலதிக நிதிப் பெற்று மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.