தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தேசிய அரசாங்கம் என்பது சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அமைக்கப்படுமானால் அதனை தான் வரவேற்பதாக என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - பெய்ன்டர்ஸ் ஞாபகார்த்த கல்லூரியில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 150 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைக்கான கட்டடத்தை நேற்று திறந்து வைத்த பின்பு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அதிபர் ரணசிங்க பண்டார தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வைத்து மேலும் அவர் கூறுகையில்,

இன்று அனைத்து இடங்களிலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. வெறுமனே அமைச்சர்களை அதிகரிப்பதற்காக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டேன் .

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுமாக இருந்தால் எனக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கிடைக்கும். ஆனால் எனக்கு அமைச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.

தேசிய அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை நடக்குமாக இருந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.

அதைவிடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்க யோசனை முன்வைக்கபடுமானால் அதனை எற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை.

வரலாற்றில் பல கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மாறியிருக்கின்றது.

வழமையாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அதனை வெற்றியாக கொண்டாடுவதே வழக்கம் ஆனால் இந்த முறை கைச்சாத்திட்ட பின்பும் அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்கின்றன.

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.

இதற்கு காரணம் அரசாங்கத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கொடுத்துள்ள அலுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் கோரியுள்ளது போல 140 ரூபாவை அரசாங்கம் வழங்க மறுத்தால் நாங்கள் அமைச்சு பதவிகளை துறப்பது என்பது நிச்சயமாக நடக்கும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

எங்களுக்கு அமைச்சு பதவி என்பதை விட எங்களுடைய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.