கிழக்கு மாகாணத்தில் இந்த ஆண்டில் சகல ஆசிரியர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும்

Report Print Navoj in அரசியல்

இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89 ஆவது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாட்களில் கல்வியை முன்னேற்றுவதற்காக நாங்கள் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவிருக்கின்றோம்.

நான் கடந்த வாரம் 50 மில்லியன் ரூபாய்களை விசேட நிதியாக ஒதுக்கிடு செய்து கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பாடசாலைகளுக்கும் தளபாடங்கள் கொள்வனவிற்காக வழங்கியிருக்கின்றேன்.

சவூதி அரேபியா தூதுவரை அழைத்து வந்து கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் சகல தளபாடப் பற்றாக்குறையை நீக்குவதற்கு அந்த அரசுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்வியில் எமது மாகாணம் ஒன்பதாவது நிலை பெறுவதற்குப் பல காரணம் இருக்கின்றது. கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை எடுப்பவர்கள் மிகப் பின்னடைவிலே இருக்கின்றார்கள்.

உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் நாங்கள் மிகப் பின்னடைவில் இருக்கின்றோம். எனவே இந்த மாகாணத்தில் அவற்றை நாங்கள் மாற்றாத வரை வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.

பாடசாலைகளிலே ஆசிரியர் பற்றாக்குறைகளை வைத்துக் கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்களைக் குறைகூறுவதில் எந்த பயனும் இல்லை என்பதை இந்த ஆளுநர் பதவியைப் பெறுப்பேற்றதில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.

எனவே இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது. ஆசிரியர் பற்றாக்குறை இடம்பெறும் பாடசாலைகளில் அப்பகுதியில் படித்த இளைஞர்களைக் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கல்வியைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநரின் கடமை என்று நான் கருதுகின்றேன்.

அதற்காக நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை அமுல்ப்படுத்த இருக்கின்றோம். அதற்கான விசேட உடன்படிக்கைகளும் எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திட இருக்கின்றோம்.

ஒவ்வொரு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் இதற்கான அதிகாரங்களை நான் வழங்க இருக்கின்றேன்.

ஒவ்வொரு அதிபர் மற்றும் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கின்றோம்.

அதனை அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுக்க வேண்டும். அப்போது தான் நாம் கல்வியை ஒரு முன்னேற்றகரமான இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers