இலங்கையின் போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் யோசனை

Report Print Steephen Steephen in அரசியல்
140Shares

இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதி வழங்கிய போதிலும் நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனால், இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கூட்டத் தொடரில் தான் இது தொடர்பாக அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் சம்பந்ததாக போர் குற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அரசியல் தீர்வை வழங்குவதாகவும் இலங்கை அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வாக்குறுதி வழங்கியது.

இதனை நிறைவேற்ற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குமாறு இலங்கை அரசு கோரியது.இதற்கு அமைய 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதால், மார்ச் 20 ஆம் திகதி இலங்கை சம்பந்தமாக நடக்கும் கூட்டத்தில், அது சம்பந்தமாக கவனத்தில் கொண்டு வந்து, பொதுநலவாய அமைப்பின் நீதிபதிகள் மூலமாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கும் யோசனையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் முன்வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.