அரசியல் பரவலாக்கம் மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல! இந்தியாவில் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் இரண்டு முறை பாரதூரமான முறையில் வீழ்ச்சியடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1980ஆம் ஆண்டுகளிலும் மீண்டும் 2014ஆம் ஆண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் வைபவம் ஒன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியாக இருந்த கட்சி இலங்கை உடனான உறவுகளை மதிக்கும் போது, ஆட்சிக்கு வரும் கட்சியும் அதனை செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, அதிகாரம் பரவலாக்கம் என்பது மக்களை திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக அல்ல எனக் கூறியுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் அயல் நாடுகள் என்பதுடன் ஒரே குடும்பம். குடும்ப பயணம் எப்போதும் சுமூகமாக இருப்பதில்லை. செயற்பாட்டு ரீதியான உரையாடல்கள் மூலம் தவறான புரிதல்களை தவிர்த்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையும், இந்தியாவும் சுயநலத்திற்காக செயற்பட்ட சிலரால் அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியிருந்தது.

அந்த வகையில் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இந்தியாவில் பாதுகாப்பு பெற்றதுடன், ராஜீவ் காந்தியின் உயிரையும் பறித்துள்ளனர்.

இந்த காலகட்டத்திலேயே இலங்கை - இந்திய உறவில் பிளவு ஏற்பட்டது. இதன்போது இழைக்கப்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.