இந்த பெப்ரவரி மாதம் முடிவடைவதற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது இதற்கான யோசனை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனையை நிறைவேற்றிக்கொள்வதில் எவ்வித சந்தேகமும் தமக்கு இல்லை என்றும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரான அலி சாகிர் மௌலானாவை வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின்போது அமைச்சர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.