டுபாய் சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள்! மைத்திரிக்கு விசேட கோரிக்கை

Report Print Thirumal Thirumal in அரசியல்
1290Shares

தற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அதிகமாக தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசியல் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மேற்கொண்டிருந்தார். குறித்த பாடசாலை 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போதை பொருள் கடத்தல் காரர்களின் மத்திய நிலையமாக மாறியிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.

இதுவரை காலமும் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அதிகமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமையை காணமுடிகின்றது.

எங்களுடைய நாடு சர்வதேச ரீதியாக போதைவஸ்து கடத்தலில் இன்று பேசப்பட்டு வருகின்றது. நாள் தோறும் கடத்தல்காரர்கள் பிடிபடுகின்றார்கள்.

அது தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். இது நமது நாட்டிற்கு ஒரு நல்ல விடயம் அல்ல.

இதனை முற்றாக இல்லாது செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தற்பொழுது டுபாய் நாட்டில் பிடிபட்டுள்ள எமது நாட்டை சேர்ந்த பிரபல போதை வஸ்து வியாபாரிகளை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்.

அவர்களின் மூலமாக இலங்கையில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய பெயர் பட்டியலை அறிந்து அவர்கள் அனைவரையும் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

அப்படி செய்வதோடு அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தாவிட்டால் போதைப் பொருள் கடத்தலை ஒரு நாளும் இல்லாதொழிக்க முடியாது.

இன்று இந்த தீய பழக்கமானது நாடு பூராகவும் பரவியிருக்கின்றது. இதன் மூலமாக விசேடமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இதனை இலலாதொழிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.