கூட்டமைப்பு பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுகிறது: டக்ளஸ்

Report Print Theesan in அரசியல்
108Shares

பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டையே தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் காரியாலயத்தில் இன்று மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டதுடன் ஊடகங்களிற்கு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் இணக்க அரசியலை கிண்டல் பண்ணி கொண்டிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது இணக்க அரசியலிற்கு வந்திருக்கிறார்கள்.

எங்களின் வழிமுறைக்கு அவர்கள் வந்தாலும் எமது பொறிமுறைக்கு அவர்கள் வராமல் தள்ளாடி கொண்டிருக்கின்றனர்.

அதனை கஞ்சாகட்சி என்பார்கள் கஞ்சா என்பது போதை ஊட்டகூடியது அதுபோல தேர்தல் என்று வரும்பொழுது மக்களை உசுப்பேற்றும் செயலில் அவர்கள் ஈடுபட போகின்றார்கள்.

தற்போது தொடங்கிவிட்டார்கள் அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று. என்னை பொறுத்தவரை அரசாங்கம் ஏமாற்றவில்லை இவர்கள் தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நாம் வடக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்துள்ளதுடன் சாதுரியமான முறையில் அவற்றை கையாண்டிருக்கிறோம்.

எமக்கு அரசியல் பலத்தை தருவார்களேயானால் இச் செயற்பாடுகளை முற்றாக தடுக்க முடியும். தற்போது தேசிய அரசாங்கம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் அது அவசியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது எமது மக்களின் பிரச்சினையை தீர்குமாக இருந்தால் அது தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்கலாம். தற்போது நாடானது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

இவற்றிற்கான தீர்வாக புதிய தேர்தல் ஒன்றிற்கு செல்வதே தற்போது சரியானதாகவிருக்கும். தேசிய அரசாங்கம் என்ற விடயத்திற்குள் சென்றுதான் தமிழ் மக்களிற்கு தீர்வுகிடைக்க வேண்டும் என்று இல்லை.

அதற்கு முன்னரே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் பங்கெடுத்திருக்கலாம். பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நான் எண்ணவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான காலம் கடந்துபோய்விட்டது.

ஏற்கனவே உள்ள 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அது ஒரு சமைக்கப்பட்ட உணவு அதனுள் அறுசுவையை ஊட்ட வேண்டும்.

எனவே திருத்தங்கள் இல்லாமல் 13 ம் திருத்த சட்டத்தை எப்படி வலுப்படுத்தலாம் என்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு நாம் சில விடயங்களை முன்வைத்திருக்கிறோம்.

அதன் மூலம் மீள திரும்ப பெறமுடியாத அதிகாரங்களை உள்ளடக்கி பொது இணக்கபாட்டின் மூலம் வடகிழக்கு பகுதிகளிற்கு விசேட அதிகாரங்களை ஏற்படுத்துவதுடன், மேற்சபை உருவாக்கம் தொடர்பாகவும் நாம் விடயங்களை முன்வைத்துள்ளோம்.

கிழக்கின் புதிய ஆளுனரின் நியமனம் தொடர்பாக தமிழ் மக்களிற்கு பல கேள்விகளும், சந்தேகங்களும் உண்டு. தற்போது நான் ஆட்சியிலும் இல்லை அத்துடன் போதிய அரசியல் அதிகாரங்களும் இல்லை.

குறிப்பாக நாடாளுமன்றில் பல ஆசனங்கள் இருந்தால் இந்த பிரச்சினைகளை இலகுவாக தீர்கமுடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்த தவறுக்கு காரணம் அரசாங்கமோ முஸ்லிம் தலைவர்களோ அல்ல தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே.

அவர்கள் மருந்துக்கு வலி என்ற ரீதியிலேயே அரசியல் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.