வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி கூட்டமைப்பினரிடமே! விஜயகலா மகேஸ்வரன்

Report Print Nesan Nesan in அரசியல்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமே இருக்கின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எமது ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சிபீடம் ஏற நூறு வீதம் பிரதான பங்காற்றியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. இதனால் தான் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்கால தீர்வை நோக்கியே எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர சுயநலத்திற்காக அல்ல.

நாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய கவீந்திரன் கோடீஸ்வரனிடம் பல்வேறுபட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி இருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிக்கு இரண்டு மில்லியன் ரூயாய் ஒதுக்கி எனது பணியினை இலகுபடுத்தியுள்ளதாக கூறினார்.

கடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார்.

இதற்கு பக்கபலமாய் நின்றுதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பினை தருவார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலரது விமர்சனங்கள் எங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது தெற்கிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

நான் இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எனது கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குபலமே முக்கியபங்கு வகித்தது.

இதுவே எங்களது மக்களை கௌரவப்படுத்தி என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக எங்களது பிரதமர் நியமிக்க காரணியாகும்.

எனக்கு கிடைத்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சு பதவியானது வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

நான் அம்பாறை மாவட்டத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளேன். நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பவியேற்ற பின்பு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு முதல்முறையாக வருகை தந்தமை எனக்கு பெருமையை தேடித்தந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிப்புற்றது எமது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே. யுத்தத்தினால் போராடிவந்த இரு மாகாணங்களும் இன்று மக்களின் தேவைக்கேற்ப போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அதேபோல் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்காக இயற்கையோடு போராடவேண்டியுள்ளது என்றும் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார்.