அரசியல் தீர்வுக்காகத் தான் ஆதரவு: விஜயகலா

Report Print Rusath in அரசியல்

அரசியல் தீர்வுக்காகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றதே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுதாவளை மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது.

இந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.

எமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள். ஆனால், இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தீர்வு என்பது எமது கைகளுக்கு எட்டப்படவில்லை. கடவுள் அதனை எப்போது கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கின்றாரோ அன்று தான் அது கிடைக்கும்.

ஆனால், அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. யுத்த காலத்திற்கு முன்னர் கல்வியில் வரலாறு படைத்தவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகும். ஆனால், கடந்த அரசாங்கம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியான எமது பகுதிக்கு போதைபொருட்களை அனுப்பியுள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பலத்துடன் நல்லாட்சி அரசை அமைத்துள்ளோம். பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் தான் போதை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு அருகாமையிலிருந்த பல பெட்டிக்கடைகளை நீக்கியிருந்தோம்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவில்லை. எமது பகுதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. இவ்வாறு பல பாகுபாடுகள் கடந்த காலங்களில் காட்டப்பட்டுள்ளன.

இவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இனிமேல் பாடுபாடுகள் காட்டாது வடக்கு மற்றும் கிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தற்போது நாம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. எமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள்.

ஆனால், இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சந்திரிக்கா பண்டாரநாயக்க இரண்டு தடவையும், மகிந்த ராஜபக்ச இரண்டு தடவையும் ஆட்சி செய்தார்கள். அவர்கள் எமது மக்களுக்கு எதை செய்தார்கள். தற்போதைய ஜனாதிபதியும் எமது மக்கள் வழங்கிய வாக்கைப் பெற்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாறாக நடந்து நாங்கள் வழங்கிய வாக்குக்கு துரோகம் அழித்துள்ளார்.

அந்த 50 நாட்களும் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம், நாங்கள் கடந்த காலத்தில் யுத்தத்திற்கு முகம் கொடுத்து, இயற்கை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து, தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு பலவற்றுக்கு நாம் முகம் கொடுத்திருக்கின்றோம்.

அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எவ்வாறு போராடுகின்றதோ அதுபோல்தான் எமது தலைவரும் வாக்கில் மாறமாட்டார். எனவே, கடந்த காலத்திலிருந்த தலைவர்களுக்கும், இன்று இருக்கின்ற தலைவர்களுக்கும், நாளை வரப்போகும் தலைவர்களுக்கும் நாங்கள் எவ்வாறான பாடம் புகட்ட வேண்டும் என்பது மக்களுக்கும் தெரியும்.

நாங்கள் வெள்ளை வான் கலாச்சாரத்தை தடுத்தி நிறுத்தியிருக்கின்றோம். காணிகளை விடுவித்திருக்கின்றோம். சில கைதிகளை விடுதலை செய்திருக்கின்றோம், பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றோம். கடந்த காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கை காட்டி சர்வதேசத்திடமிருந்து பெறப்பட்ட நிதிகள் தெற்கிலே தான் செலவு செய்யப்பட்டிருக்கின்றது.

தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. எனவே, எமது தலைவர் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு நேரடியாகச் சென்று அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். இவ்வாறான தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறெனில் தான் நாம் நினைத்த குறிக்கோளை அடைய முடியும்.

எமது பிரதமரின் சட்ட நுட்பங்களால் தான் நாம் மறு பிறவி எடுத்து தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

தற்போது கம்பரெலிய திட்டத்தின் மூலம் அபிவிருத்திக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பல வழிகளில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

எமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு அமைச்சரவையிடம் கேட்டிருக்கின்றோம். களுதாவளை, பிள்ளையார் ஆலயத்தில் மண்டபம் அமைக்குமாறும், இப்பாடசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை பூர்த்தி செய்து தருமாறும் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் த. கனகசபை, பட்டிருப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநானம் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers