புதிய அரசமைப்பு நாட்டை துண்டாக்கும் என நாட்டு மக்களை குழப்பும் மஹிந்த! ரணிலின் கேள்வி

Report Print Rakesh in அரசியல்

புதிய அரசமைப்பு நாட்டை துண்டாக்கும் என நாட்டு மக்களை குழப்பும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டு வரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வு திட்டத்தை முன்வைக்க போகின்றார்? என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்படுவதாகவும், எனவே தாம் முன்னெடுத்த புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமது ஆட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ச, இறுதியில் அவர்களை ஏமாற்றினார்.

இதனால் அன்று தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டார்கள். இவ்வாறு செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடனும் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகின்றார்?

ஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை அவர் வெளியிடுகின்றார்.

ஆனால், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாடளாவிய ரீதியில் வாழும் தமிழர்கள் மஹிந்தவிற்கு தமது வாக்குகளினால் பதிலடி கொடுத்து விட்டார்கள்.

அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். புதிய அரசமைப்புக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல மூவின மக்களுமே ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றார்கள்.

ஆனால், மஹிந்த அணியினர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள்தான் இனவாத ரீதியில் பரப்புரைகளை மேற்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்கள்.

எனினும், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

Latest Offers