ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர தயாராகும் ஐ.தே.கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி அதிகரிக்கவில்லை எனில், அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தொடர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.

பிரதமர் ஆலோசனை வழங்கினால், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின்படி அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளதாகவும் அப்படி நியமிக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதகமாக அமையும் என அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்த சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி நடந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக உறுதியாகும்.

அத்துடன் ஜனாதிபதி சிறிசேன தற்போது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி சில அமைச்சுக்களை கைப்பற்றி வைத்துள்ளார். இணக்கமாக தொடர்ந்தும் ஆட்சி செய்ய ஜனாதிபதி தயாரில்லை என்றால், சட்டப்படி ஜனாதிபதியின் தவறை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.