ஜனாதிபதி தேர்தல் மும்முனை போட்டி களமாக மாறலாம்

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்ற முடியாது போனால், தமது கட்சியும் கட்டாயம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மும்முனை போட்டியாக இருக்கும். எமது கட்சியின் தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி, அவருக்கு ஆதரவாக மேலும் பல சக்திகளை திரட்டி, அனைத்து வேட்பாளர்களுக்கும் பலத்த சவாலை ஏற்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே லால்காந்த இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை.

இந்த வேலைத்திட்டம் தோல்வியடைந்தால், கட்டாயம் மும்முனை போட்டியை ஏற்படுத்தும் தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை மாற்றுவோம்.

எமது கட்சியின் தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியிடம் குறைந்தது 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வங்கி உள்ளது. இந்த வாக்கு வங்கி ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers