குற்றங்களை செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைதிகள் பரிமாற்ற சட்டத்தை அமுல்படுத்தி உடனடியாக இலங்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹேனமுல்ல செத்சந்த சேவன வீடமைப்பு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
மாகந்துரே மதுஷ் மட்டுமல்ல, உதயங்க வீரதுங்க, அர்ஜூன் மகேந்திரன், ஜாலிய விக்ரமசூரிய போன்றோரும் இவ்வாறு வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் நபர்கள்.
இலங்கையில் குற்றங்களை செய்து விட்டு, குற்றவாளிகளின் அடைக்கல பூமியாக துபாய், சிங்கப்பூர் அல்லது வேறு எந்த நாட்டுக்கு சென்று தலைமறைவாகி இருந்தாலும் குற்றவாளிகளை இலங்கைக்கு கொண்டு வர உடனடியாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை உருவாக்கி அவர்களை கொண்டு வர வேண்டும்.
மிக முக்கியமான மனிதர்களாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், சில வர்த்தகர்கள், சில கலைஞர்கள் மறைமுகமான வகையில் வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.