தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கப்போவதில்லை

Report Print Kumar in அரசியல்

தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த ஆதரவினையும் வழங்கப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு, அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளிகளாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, ஆனைப்பந்தியில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல பெருமைகள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கிய பெருமை இந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உள்ளது.

இளைஞர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலாகும்.

தமிழ் மக்களின் விடுதலையென்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலையில் இருந்தன.

அதனை நாங்கள் கதைத்தால் இனவாதம் என்று கூறுவார்கள். அரசாங்கத்தினால் மட்டும் நில அபகரிப்பு செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன.

கிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும். எங்களின் போராட்டத்திற்காக நாங்கள் ஆயுதங்கள் ஏந்தி போராடினோம், உயிர்களை பறிகொடுத்தோம்.

ஆனால் எமது போராட்டத்திற்காக அகிம்சை ரீதியில் போராடி தீக்குளித்து எங்களுக்காக மரணித்த இளைஞர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.

இலங்கை தமிழ் இனத்தின் மீது பற்று கொண்டு 16 இளைஞர்கள் தமிழ் நாட்டில் தீக்குளித்து மரணித்துள்ளனர். அந்தவேகம் இன்றும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றது. அதற்கு நாங்கள் உரமூட்டவேண்டும்.

தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாக பார்க்கவேண்டும். அன்றாட பிரச்சினையை தீர்ப்பது. அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும்.

இரண்டையும் செய்ய வேண்டிய நிலையிருக்கின்றது. இளைஞர்கள் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டும்.

அதற்காக துப்பாக்கியேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்பட போவதில்லை. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்கள தரப்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விட தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிங்கள தரப்பினை விமர்சிப்பதை விட தமிழர் தரப்பினை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாக காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சோரம் போயுள்ளது என்று யாராவது விரலை நீட்டி கூறமுடியாது.

மூன்று ஆண்டுகள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம், காணாமல்போனோர் பிரச்சினைக்கான ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் அது முழுமை பெறாத நிலையிலும் அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என நாங்கள் கோரிவருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலரின் பேச்சுகள் சிலரை கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது.

வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரம் இல்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது அதற்கு மாறான கருத்துக்களை தெரிவிக்கும்போதே விமர்சனங்களை ஏற்படுத்துகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் சோரம்போகவில்லை. இந்த அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றோம். நாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சு பொறுப்புக்களை ஏற்றிருக்கமுடியும்.

இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து தேசிய அரசாங்கம் என்ற ஒன்றை அரசாங்கம் கொண்டுவர முற்படுகின்றது.

தேசிய அரசாங்கத்தினை ஏற்படுத்துவது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளிகளாக இருக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நினைத்திருந்தால் அமைச்சு பொறுப்புகளை ஏற்றிருக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை எடுத்தால் என்ன என்ற சூழல் இன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இன்று முஸ்லிம்களின் கிராமங்களை பார்க்கும்போது செழிப்பான வளமான பிரதேசமாக உள்ளது. எங்களது கிராமங்கள் அவ்வாறே இருக்கின்றது.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கின்றோம். ஆனால் அவ்வாறே இருக்கின்றோம். அமைச்சர்களாக வந்தால் பல விடயங்களைச் செய்யலாம் என மக்கள் நினைக்கும் நிலையும் உள்ளது. ஆனால், நாங்கள் அதனை செய்யவில்லை.

இன்றும் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றும் நிதானமாகவே செயற்பட்டு வருகின்றது.

இங்கு வருகை தருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் சொல்கின்ற விடயம் எங்களுடைய இன பிரச்சினை, ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐ.நா சபைக்கு நாங்கள் செல்லவிருக்கின்றோம். இந்த அரசாங்கம் ஐ.நா சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு உடந்தையாக இருக்க முடியாது.

இளைஞர்களாகிய நாங்கள் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநிதிகளை தட்டிக்கேட்பவர்களாக இருக்க வேண்டும். அதற்காக போராடுவதற்கு முன்வர வேண்டும்.

மக்களுடைய தேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை ஆராய்ந்து திட்டங்களை வகுக்க வேண்டும். இன்று நாங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு இளைஞர்களை தெரிவு செய்திருக்கின்றோம்.

அந்தப் பிரதேசங்களில் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து செயற்படுவதில் பிரதேசசபை உறுப்பினர்களைத் தவிர அவர்களுக்கும் கடமைகள் இருக்கின்றன.

எங்களுடைய நகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் கொழும்பிற்கு வந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எங்களுடன் சண்டை பிடிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.