குற்றப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் நாட்டை ஆட்சி செய்து வருகிறார். அரசியலமைப்பு பேரவையின் கடமைகள் குறித்து கேள்வி எழுப்பிய விதம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள வார பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் லால்காந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமாயின் ஜனாதிபதியை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்கான குற்றப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லாது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஜனாதிபதி முதல் முறையாக அரசியலமைப்புச் சட்டத்தை மீறினார் என்பதை உறுதிப்படுத்தியது. உண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்திலேயே ஜனாதிபதி கௌரவமான முறையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

இலங்கை தற்போது ஜனநாயக விழுமியங்களை மீறிய நாடாக மாறியுள்ளது. அதில் ஜனாதிபதி முதன்மையானவராக இருப்பதாகவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.