புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் யோசனைக்கு வாக்களித்த மகிந்த!

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக வழிக்காட்டல் குழுவை நியமிக்கும் யோசனைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் தற்போது, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது கேள்விக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட எதிர்க்கட்சியினரும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர போகிறோம் , இதனால், சிங்கள பௌத்த மக்கள் அழிந்து விடுவார்கள் என்ற பொய்யான பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும், நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்ற வழிக்காட்டல் குழுவை நியமிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமையவே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மகிந்த ராஜபக்சவும் இதற்கு வாக்களித்தார்.

தினேஷ் குணவர்தனவும் வாக்களித்தார், நாங்களும் வாக்களித்தோம். வழிக்காட்டல் குழுவில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.

தற்போது நாங்கள் யோசனையை மாத்திரமே முன்வைத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை. அதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

நாடாளுமன்றமே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும். பௌத்த மதத்திற்கு வழங்கும் முன்னுரிமை அதே போல வழங்கப்படும் என்று யோசனையில் உள்ளது.

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையாட்சி முறையை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.