தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும்! இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

மலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

இன்று மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியான விடயங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு காரணம் மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் வீதிகளாகும் என சுட்டிக்காட்டிய அவர் கஷ்ட பிரதேசங்கள் முதல் அனைத்து தோட்டப்பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நகர் புற பிரதான வீதிகளில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு உள் வாங்கும் பிரதான வீதிகள் சீர்கேடு காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது வீதி பாதுகாப்பு இன்றியும் அவதிப்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகள் உள்ளிட்ட அசௌகரிகங்களுக்கும் ஆளாகுகின்றனர்.

அதேபோன்று சுகவீனம் அடையும் ஒருவரை நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வீதிகள் ஒழுங்கீனம் காரணமாக உயிரை விடும் நிலையும் ஏற்படுவதால் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

அதேபோன்று தோட்டப்பகுதிகளில் பயிர் செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு உரங்கள் மற்றும் பயிர்களை சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லையிலும் வீதிகள் தடையாக அமைவதனால் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

இந்த நிலையில் பெருந்தோட்ட வீதிகளை செப்பனிட ஒரு தொகை பணத்தினை அரசாங்கம் வழங்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டு வருகின்றது.

சில இடங்களில் "ரோட்டு செய்து தந்தால் ஓட்டு" தருவோம் என தேர்தல் காலங்களில் மக்கள் குரல் எழுப்புவார்கள் அந்த நிலை டயகம பிரதேசத்திலும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் இன்று மலையக பகுதிகளை புறக்கணித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்புறக்கணிப்பை மறுசீரமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றார்.

இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அரசுக்கு ஒர் பின்னடைவை ஏற்படுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றார்.