இனவாதமற்ற அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான்

Report Print Kumar in அரசியல்

தமிழர்களுடைய தீர்வு போன்றவற்றை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் செ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது களுதாவளை மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அது தொடர்பான சான்றிதழ்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கம், வகுப்பறை கட்டடம், மலசல கூடம் என்பவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இல்ல விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்களையும் வழங்கிவைத்துள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சரினால் பாடசாலைக்கும் களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கும் செய்யப்பட்ட சேவையினை கௌரவிக்கும் வகையில் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

நாங்கள் வடக்கு, கிழக்கிலே ஒற்றுமையாக வாழவேண்டும். இந்த மண்ணிற்காக போராடியவர்கள் பலர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தங்களுடைய தீர்விற்காக வடக்கு, கிழக்கிலே எமது ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது.

எதிர்காலத்தில் ஒரு தீர்வை அடைய வேண்டும் என்பதற்காக தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் அல்ல. இனவாதமற்ற அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான்.

நாங்கள் கடந்த காலங்களில் பிரதேசசபை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை பலருக்கு வாக்களித்தும் எந்தப் பலனையும் காணவில்லை.

நாங்கள் அளித்த வாக்குகள் மூலம் பதவிக்கு வந்த ஜனாதிபதிகூட இரண்டு மாதங்களாக சிறுபான்மை இனங்களுக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார்.

நாங்கள் அவருக்கு அளித்த வாக்குகளுக்கு எமக்கு துரோகம் இழைத்திருக்கின்றார். பிரதமரை மாற்றி அமைச்சர்களை மாற்றி அந்த ஐம்பது நாட்களும் அவர்கள் செயற்பட்ட விதம் உங்களுக்குத் தெரியும்.

கம்பிரலிய திட்டத்திற்கென வடக்கு, கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அந்த ஐம்பது நாட்களும் அவர்களே பயன்படுத்தினர். நாடாளுமன்றத்திலே பல முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

எங்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். வடக்கு, கிழக்கிலே நாங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்து இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து நாடாளுமன்றத்திலும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம்.

அந்தவேளையில் அவர்கள் அந்த குறுகிய காலத்தில் நிதிகளை தங்களுடைய மாவட்டங்களுக்கு மாற்றியிருக்கின்றார்கள். இப்படியாக பல பாதிப்புகளுக்கு நாங்கள் முகங்கொடுத்திருக்கின்றோம்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எப்படிப் போராடுகின்றதோ அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரேவாக்குறுதியுடன் உள்ளார்.

நாங்கள் கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தும் இன்று நிம்மதியாக வாழக்கூடிய நிலையிருக்கின்றது. வெள்ளைவான் கலாசாரத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கிலே படைகளிடமிருந்து தனியார் காணிகளை மீட்டுக்கொண்டிருக்கின்றோம். கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கினை காட்டி சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிகள் மூலம் தென்மாகாணங்களில்தான் அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களை இனங்கண்டு உரிய இடங்களுக்கு அபிவிருத்திகள் சென்றடைகின்றன.

வருகின்ற வாரங்களில் பிரதமர் வடக்கிலே தங்கியிருந்து அங்கு சில வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அடுத்தமாதம் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்திலே நிதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்குள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கூட்டங்களை நடத்தி அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இப்படியான அரசியல் தலைவர்களையே நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாங்கள் எமது குறிக்கோளை சென்றடைய முடியும்.

நாங்கள் எமது சமூகத்தை கல்வியினாலேயே வளர்த்தேடுக்க முடியும். எமது பிரதமர் ஒரு சட்டத்தரணியாவார். அவர் தனது கல்வியின் மூலமே ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கின்றார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தது. அதனூடாகவே நாங்கள் ஆட்சியமைத்திருக்கின்றோம்.

கம்பிரலிய திட்டத்தினூடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல வழிகளிலும் நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால அரசாங்கத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.

வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினைகள், தமிழர்களுடைய தீர்வு போன்றவற்றை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

எங்களுடைய அரசாங்கத்தினூடாக பல இடங்களில் வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கின்றோம். தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் இருக்கின்றனர்.

எனினும் வடக்கு, கிழக்கில் உள்ள தொண்டர் ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. யுத்த காலத்திலும் பல்வேறு அனர்த்தகாலங்களிலும் கடமையாற்றியுள்ளனர். அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கோரியுள்ளோம்.

இந் நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் நஜீமுதீன் மற்றும் அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் புள்ளநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.