மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி! ராஜித சேனாரத்ன

Report Print Rakesh in அரசியல்

2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியை கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி, 52 நாட்களின் பின் ஓர் இணக்கத்துக்கு வந்து மீளவும் ஆட்சியமைக்க உதவியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜனாதிபதி மீண்டும் தம்முடன் முட்டி மோதுவதாகவும் அவர் இன்று குறிப்பிட்டுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு முழு ஒத்துழைப்புகளையும் அன்றும் வழங்கி வந்தது. இன்றும் வழங்கி வருகின்றது. ஆனால், அவர் எம்மை தவறாக எடைபோடுகின்றார்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மீண்டும் முட்டி மோதுகின்றார். இது நாட்டின் அரசியலுக்கு அழகு அல்ல. இதை உணர்ந்து ஜனாதிபதி செயற்பட வேண்டும்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு ரணில் விக்ரமசிங்க முழு ஆதரவு வழங்கினார். இதை மைத்திரிபால சிறிசேன மறக்காமல் இருந்தால் சரி.

நாட்டின் அபிவிருத்தியை முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டே தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.