இந்து சமயவிவகார அமைச்சு என்பது ஒரு தூங்கும் அமைச்சாக இருக்காது! மனோகணேசன்

Report Print Kumar in அரசியல்

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான மத்திய நிலையம் ஒன்றை மட்டக்களப்பில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூக மேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சின் மூலம் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டது. எங்களது அரசாங்கத்தினை சில தரப்பினர் திருட முற்பட்டனர்.

அந்த கும்பலை மக்களின் பலத்துடன் சட்டத்தின் பலத்துடன் நாங்கள் விரட்டி அடித்துள்ளோம். அதனால் எமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

அவ்வாறான விடயங்கள் சில நல்லதில் முடியும். நாரதர் கலகம் நல்லதில் முடியும் என்பது போன்று அந்த விபத்தினால் அமைச்சரவை மாற்றப்பட்டு எனக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்து சமய விவகாரம் என்பது பெரிய ஒரு விடயமாகவுள்ள நிலையிலும் அதற்கு கணிசமான நிதியொதுக்கீடு செய்யப்படுவதில்லை.

இந்துக்கள் வாழும் இடங்களில் இந்து கோயில்கள் அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

பிற மதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் அவர்கள் கோயில்களை அமைப்பதில்லை. கோயில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் நாங்கள் பிடிப்பதில்லை.

கடந்த மூன்று காலாண்டுகளுக்கு மூன்று கோடியும் அடுத்த காலாண்டுகளுக்காக ஒன்பது கோடியும் இந்து விவகாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தினை போன்று இந்து சமயவிவகார அமைச்சு என்பது ஒரு தூங்கும் அமைச்சாக இருக்காது.

கடந்த முறையிருந்த அமைச்சர் சிறப்பாக செயற்பட்டவர். எனினும் அவரது வேலைப்பழுக்கள் காரணமாக சிலவற்றை செய்யாமல் முடியாமல் போயிருக்கலாம்.

இந்து சமயத்தினை பொறுத்தவரையில் ஒரு கட்டமைப்பு இல்லாத மதமாக இருக்கின்றது. சகோதர மதங்கள் கட்டமைப்பு கொண்ட மதமாக இருக்கும்போது இந்து சமயம் கட்டுப்பாடுகள் இல்லாத மதமாக இருக்கின்றது.

யாரும் எதனையும் செய்ய முடியும் என்ற நிலையிருக்கின்றது. அதற்கு முடிவுகட்ட வேண்டும்.

ஏனைய மதங்களுக்கு இருப்பது போன்று ஒரு ஒழுங்கமைப்பினை கொண்டுவர நினைக்கின்றோம். அரசாங்கம் மத விவகாரங்கள் தலையிடுகின்றது என்பது அதன் அர்த்தம் அல்ல.

அனைவரையும் ஒருங்கிணைத்து தேசிய ரீதியாக ஒரு கட்டமைப்பினை உருவாக்க தீர்மானித்துள்ளோம். அது மாவட்ட மட்டத்திலும் செயற்பட கூடியவாறு அமைக்கப்படும்.

இலங்கை தேசிய இந்து சபை என்னும் பெயரில் அந்த கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதில் நான்கு பிரிவினர் பங்குபற்றுவர்.

மதகுருக்கள், ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள். இந்த நான்கு பிரிவினரையும் ஒன்றாக இணைத்து மாவட்ட ரீதியிலும் அந்த சபை ஏற்படுத்தப்படும்.

அதேபோன்று வடமாகாணத்தில் அமைக்கப்பட்டது போன்று மொழி பயிற்சி மற்றும் அமைச்சின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான மத்திய நிலையம் ஒன்றை மட்டக்களப்பில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த், இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் க.கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers