52 நாட்கள் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி! ஐ.தே.கவின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு

Report Print Thirumal Thirumal in அரசியல்

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.கவின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று அம்பகமுவ கேட்போர் கூட மண்டபத்தில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்பாடுகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை நுவரெலியா மாவட்டத்திற்கு மாற்றான் தாய் மனப்பாங்குடன் வேலை செய்து வருகிறது.

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தன. எனினும் குறித்த வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கின்றன.

பல பாதைகள் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் மோசமாக இருப்பதுடன், இந்த பாதைளை அபிவிருத்தி செய்யுமாறு பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் தொடர்ந்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மாற்றான் தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

இது எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமையலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அம்பகமுவ பிரதேசத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு இருந்த 66.5 மில்லியன் நிதி திரைசேரியினால் மீளபெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனை 52 நாட்கள் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களே என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.