தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருகிறார்கள் என வன்னி மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த நான்கு வருடங்களாக தமிழ் பேசும் மக்களுடைய பேராதரவுடன் வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் குறைந்த பட்சமான அன்றைய பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை.
விசேடமாக புதிய அரிசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும். அதனுடாக நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் மீறப்பட்டுள்ளன.
இந்த ஆண்டானது மாகாணசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆண்டாக காணப்படும்.
இவ்வாறான தேர்தல் ஆண்டில் தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியல் அமைப்பு கொண்டுவருவது நடக்காத விடயம்.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்வர்கள் தொடர்பான விடயங்களுக்கும் தீர்வு காணமுடியாத நிலையே காணப்படும்.
இந்த நான்கு வருடமும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்கின்றனர்.
இது மாத்திரம் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றன என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.