குழப்பங்களிற்கு முழு காரணம் சம்பந்தன் ஐயாவே!

Report Print Theesan in அரசியல்

பொருளாதார மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழு காரணம் சம்பந்தன் ஐயாவே என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது.

பின்னர் சில அரசியல்வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஓமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டால் இஸ்லாமிய சகோதரர்கள் வழிபடுவதற்கு அங்கு பள்ளிகள் இல்லை எனவே தாண்டிகுளம் பண்ணைதான் சரியான இடம் என்பதில் அவர்கள் பிடியாக நின்றார்கள்.

அவர்களோடு சேர்ந்து எமது மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அது சரி என்று நின்றார்கள்.

இறுதியில் சம்பந்தன் ஐயா தலைமையில் இவ்விடயம் ஆராயப்பட்டு வாக்கெடுப்பிற்குச் சென்றது.

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு மாறாக வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டாம் என்று நான் அவரிடம் கோரியிருந்தேன்.

அதனை பொருட்படுத்தாது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 14இற்கும் மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ஓமந்தையில் அமைய வேண்டும் என்று வாக்களித்தார்கள்.

ஒரு சிலரே தாண்டிகுளத்தில் அமைய வேண்டும் என்று விரும்பினர், எனினும் சம்பந்தன் ஐயா அந்த ஜனநாயக தீர்ப்பிற்கும் மதிப்பளிக்காமையினால் இன்று தமிழ், சிங்கள கிராமங்களை உள்ளடக்கிய எல்லையில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடம் காலப்போக்கில் கைமீறி போவதுடன் விவசாயிகளின் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட திட்டம் ஒரு கட்சி அரசியலிற்கு ஊடாக குறுகிய செயற்பாட்டால் திசை திருப்பப்பட்டுள்ளது, இதற்கு முழு காரணம் சம்பந்தன் ஐயாவையே சாரும்.

தற்போது தினச்சந்தை நடாத்துபவர்களில் 14 கடைகளில் உரிமையாளர்கள் குறித்த கடைகளை 15 வருடங்களாக அவரக்ள் நடத்தாமல் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

உண்மையில் விவசாயிகள், தோட்ட செய்கையாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் உற்பத்தி பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இது உருவாக்கப்பட்டது.

ஏற்கனவே விவசாயிகளிற்கு சந்தை வாய்ப்புக்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையும் இருக்கின்றது.

எனவே அவர்களிற்கும் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும், குறிப்பாக வவுனியாவில் அமைந்துள்ள 8 கமநலசேவை நிலையங்களை மையப்படுத்தி குறைந்தபட்சம் தலா 2 கடைகளையாவது ஒதுக்கி வழங்கினால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.