சம்பந்தனுக்கு ஓய்வு! கூட்டமைப்பின் தலைவராகின்றார் சுமந்திரன்?

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.

இந்நிலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கூட்டமைப்பின் தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.