த.தே.கூ தலைமையில் மாற்றமா? மாவை - சுமந்திரன் மறுப்பு

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக எம்.ஏ. சுமந்திரன் எம்.பியைத் தெரிவு செய்வது தொடர்பாகக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது எனத் தெரிவித்து கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவனின் பெயரில் வெளியான செய்திகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், இந்தத் தகவல்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அடியோடு மறுத்தனர் இந்த விடயத்தை ஒட்டிய செய்தி நேற்று முதன்முதலில் 'த ஐலண்ட்' பத்திரிகையில் வெளியாகியது.

கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட எம்.பி. சரவணபவனை மேற்கோள்காட்டி வெளியான அச் செய்தியை அடுத்து இணையத்தளங்கள் பலவும் இந்த விடயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதைப் பரபரப்பாக்கின.

அந்தச் செய்திகளின் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது,

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினாலும், உடல்நலக் குறைவினாலும், தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உடலளவில் சிரமப்படும் நிலையிலேயே, கூட்டமைப்பின் புதிய தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமையை உறுதிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர். ஆனால், அவரது உடல் நிலை நன்றாக இல்லை. இதனால் அவர் கட்சியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மூப்பு நிலைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே, கூட்டமைப்பின் அடுத்த தலைவராக வரவேண்டும். எனினும், அவரது உடல்நிலை தீவிரமான அரசியல் செயற்பாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு ஏற்றதாக இல்லாமையினால், சுமந்திரனை முன்னிறுத்த முயற்சிகள் நடக்கின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்." என்று அந்தச் செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

இவ்விடயம் குறித்து சரவணபவன் எம்.பியுடன் தொடர்பு கொள்வதற்கு பல ஊடகங்ளும், செய்தி நிறுவனங்களும் முயன்றன. எனினும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இவ்விடயம் குறித்து கொழும்பு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பியைத் தொடர்பு கொண்டு வினா எழுப்பியது.

"சரவணபவன் எம்.பியை மேற்கோள்காட்டி ' தஐலண்ட்' நாளிதழில் வெளியான செய்தியை நான் அறிந்தேன். எனினும், அவ்வாறு கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் குறித்து ஏதும் சிந்திக்கப்படவேயில்லை. அப்படி ஒன்றும் இல்லை" என்று மாவை பதிலளித்தார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் அதே போன்ற கருத்தை தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் சரவணபவன் எம்.பி. இல்லை. ஆகவே, இத்தகைய கருத்து அதன் கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் கூறியிருப்பார் என்பது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி எதுவும் அங்கு பேசப்படவும் இல்லை" எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers