அகில விராஜிடம் பகிரங்க சவால் விடுத்துள்ள பந்துல குணவர்தன

Report Print Sinan in அரசியல்

இலங்கையில் சுதந்திரக் கல்வி முறைமை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் கல்வியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

பொரளையில் அமைந்துள்ள பொருளாதார ஆய்வு மையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை பொருட்படுத்தாது, அல்லது அவரது அவதானத்திற்கு உட்படுத்தாது கல்வியமைச்சர் வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இலங்கையில் சுதந்திரக் கல்வியினை முடிவுக்கு கொண்டு வரும் மற்றும் தனியார் கல்வி மயப்படுத்தலை சட்டரீதியான கட்டமைப்பின் கீழ் ஆரம்பிக்கும் முதல் செயற்பாடாகவே விளக்குகின்றது.

இன்று கல்வி தொடர்பான சட்டங்கள் மாற்றம் பெற்று வந்தாலும், மஹிந்த சிந்தனை இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே காணப்பட்டது.

கல்விமைச்சரின் செயற்பாடு இலங்கை கல்வி வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிக மோசமான ஒரு நிலையாகும். அத்தோடு இலட்சக்கணக்கிலான ஏழை பரம்பரை மாணவர்களுக்கு மேற்கொள்ளும் பாரிய துரோகம் இது. எதிர்கட்சியினராக நாம் கல்வியமைச்சரின் இந்த செயற்பாட்டினை முற்றிலும் எதிர்க்கின்றோம்.

அத்தோடு இந்த கல்வியினை தனியார் மயப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் கல்வியமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையில் சுதந்திரக் கல்வி தனியார் மயப்படுத்தப்படுகிறதா? எனும் தலைப்பின் கீழ் விவாதிக்க முன்வருமாறு தற்போதைய கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் முன்னாள் கல்வியமைச்சரான பந்துல குணவர்தன பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Latest Offers